"அவன்
ஒரு பட்டுவேட்டி பற்றிய
கனாவில் இருந்தபோது
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது.."
இந்திய சுதந்திரத்தை இப்படியாகத்தான் பதிவு செய்கிறார் சமகாலக் கவிஞர் ஒருவர். அன்று இல்லாத ஒரு தேசத்தை, தன் இரும்புகைகளுக்குள் கட்டிவைத்திருந்தது ஆங்கிலேய கைவிலங்கு. அதை ஓங்கியுடைக்க இரும்பை விட வலிமையான ஆயுதம் வேண்டுமென்றார்கள் சிலர். அணுகுண்டே போதாது என்றார்கள் பலர். இந்த முரண்பாடுகளுக்கு மத்தியில் காந்தி என்றொரு காகிதப்பூ வாசமில்லாமல் பூத்தது. அது காகிதமானதால் எல்லாவற்றையும் தன்னுள் எழுதிக்கொண்டது; வெறுப்புகள் சேர்ந்தால் அழித்துக் கொண்டது; தவறுகள் சேர்ந்தால் திருத்திக் கொண்டது; ஆனால் பறப்பதை மட்டும் நிறுத்திக் கொள்ளவே இல்லை. இப்படியான பல காகிதங்களால் தான் இந்தியா என்றொரு தேசம் இன்று கண்முன் கிடக்கிறது.
"இந்திய தேசத்தின் வரலாறு என்பது, இந்தியர் அல்லாதவர்கள் இந்தியாவை ஆண்டது தான்" என்கிறார் கார்ல் மார்க்ஸ். அப்படியாக நம் வரலாறு எழுதப்பட்டுவிடக்கூடாது. இந்தியா ஒரு உயிரி. அதன் ரத்தநாளங்கள் சிந்து நதியாகவும் காவிரி நதியாகவும் பாய்ந்துகொண்டிருக்கிறது; காஷ்மீரகக் குளிரில் உச்சந்தலை குளித்துவிட்டு, கன்னியாகுமரி கடலில் உள்ளங்கால் அலசுகிறது இந்நாடு; 29 மா-நிலங்களும் மா-தவங்கள் செய்தளித்த தவப்புதல்வர்களால் தான் இத்தேசம் கொண்டுகூட்டப்பட்டுள்ளது!
காஷ்மீரக சிங்கங்கள்
காஷ்மீர் என்ற பிரதேசம் பாலைவனப் பனியால் மட்டுமல்ல, பலநூறு இரத்தக்கறையாலும் ஆனது. எந்த பணித்தலும் இல்லாமல் இரண்டு தலைவர்களை இந்தியாவிற்கு அர்ப்பணித்தது. ஒன்று ஷேக் அப்துல்லா, மற்றொன்று நேரு; ஒருவர் இஸ்லாம், மற்றொருவர் ஹிந்து; ஒருவர் காஷ்மீருக்காகவே போராடியவர், மற்றொருவர் காஷ்மீருக்காகவும் போராடியவர். இருவருக்கும் உள்ள வித்தியாசம் இவ்வளவே. ஒற்றுமையோ ஒருநூறு. மதச்சார்பற்ற, மாண்புறு அறிவுடையாளர்கள்! ஒருவர் காஷ்மீரக பிரதமரானர், மற்றொருவர் இந்தியாவின் பிரதமரானார். அப்படியாக இரு பிரதமர்களை இந்தக் காஷ்மீரகப் பள்ளத்தாக்கு பெற்றெடுத்திருக்கிறது.
இந்துத்துவமாகயிருந்த தேசத்தை இழுத்துப்பிடித்த அருமையும், இங்கிலீஷ்காரனை எட்டிமிதித்த பெருமையும் நேருவையே சாரும். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையிலேயே செலவிட்டாலும், தன் மகளுக்குப் பாடம் எடுக்கக் கூட நேரமில்லாது போனாலும் கடிதப் போக்குவரத்தின் மூலமே காலத்தை நகர்த்தியவர் நேரு. இந்த உத்தமச்சீலரின் பிறந்தநாளை கொண்டாட, குழந்தைகள் கொடுத்துவைத்திருக்க வேண்டும்!
பஞ்சாப்பின் பண்பாளர்
இன்குலாப் ஜிந்தாபாத் என்ற வார்த்தைக்குள் ஆயிரம் வாரணங்களின் அசாத்திய சக்தி அடங்கியிருக்கிறது. பதின்பரும வயதிலேயே நாட்டு சுதந்திரத்திற்காக போராடத் தொடங்கிய பகத் சிங்கை பெற்றடுத்த மண் இந்த பஞ்சாப். சூடான இளரத்தம் எப்படியிவரை சும்மா அமரவைக்கும்? வீரதீர செயல் செய்தார். பிரிட்டிஷ் அதிகாரியை கொன்று வீசினார். தூக்கிலிடப்படும் சதியொன்று தூங்கும் வேலையில் வந்துசேர்ந்தது. ஓடாமல், ஒளியாமல் தூக்கு மேடையை சிரிப்புடன் வரவேற்றார்.
தன் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றும் வயதில், நாட்டிற்கு உயிர்விட்ட நால்வர்களை என்னென்ன சொல்லி நாம் பாராட்ட வேண்டும். இத்தனை அரும்பாடு பட்டும், சுதந்திர நாட்டின் மூச்சுக்காற்றை அவர்கள் சுவாசிக்கமலேயே உயிர்விட்டார்கள். இந்தியாவின் எலும்பானது சுக்குநூறான பல இளைஞர்களின் மாமிசத்தை தின்றுத் தின்றுதான் மஞ்சைத் தீட்டியிருக்கிறது.
உத்தரவாதமளித்த உத்திரப் பிரதேசம்
1757-யும் 1857-யும் அவ்வளவு எளிதில் இந்தியர்கள் மறக்க முடியாது. முந்தையது இந்தியா அடிமையான வரலாறு, பிந்தையது இங்கிலாந்து அடிபணிந்த வரலாறு. ஆங்கிலேய அடிவருடிகள் சிப்பாய் கிளர்ச்சி என்றாலும் முதல் சுதந்திரப் போர் என்றே தேசப்பற்றுள்ள தேகங்கள் தெம்போடு சொல்கிறது.
1857 புரட்சியின் நாயகன் மங்கல் பாண்டியும், புரட்சி நாயகி ராணி லட்சுமி பாயும் வாழ்ந்த உத்தம தேசம் இந்த உத்திரப் பிரதேசம். வரலாற்றின் பக்கங்களில் உத்திரப் பிரதேசமானது உதிரம் சொட்டி எழுதப்பட்டிருக்கிறது. இங்கு 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 19-ம் நூற்றாண்டின் இறுதிவரை துறைவாரியான வீரர்கள் ஏராளமாக கிடைக்கின்றனர். மீசை முளைக்காத குழந்தையை போருக்கு அனுப்பியது தமிழர் நெறி என்றால், கைக்குழந்தையைக் கூட போருக்கு அழைத்துச் சென்றது இந்த மண்ணின் நெறி!
குஜராத்தின் குடிமகன்
படிப்பில் நடுத்தர மாணவன், வீட்டிற்கு அடங்கும் சுட்டிப்பையன், சைவக்குடும்பத்தில் பிறந்தும் அசைவம் உண்ணும் முயற்சி, கொடுமையான விரதம் மேற்கொள்ளுதல், 18 வயதில் தந்தை, இங்கிலாந்துக்குப் பயணம், உணவில் உஷாரான கிராக்கி, சமயத்தில் அதீத ஈடுபாடு, கஷ்டப்பட விரும்புதல், பாரிஸ்டராக தேர்வு, இந்தியா திரும்புதல், வக்கீலாக லாயக்கில்லை, கூச்ச சுபாவம், மனைவியை அடிமையாக பாவித்தல், தென்னாப்பிரிக்கா பயணம், தாழ்த்தப்படுதல், அடங்கிப் போதல், பிரிட்டிஷ் விசுவாசம், அடங்கி - அடங்கி விம்மிப் பொறுமுதல், ஒன்றிணைதல், கற்பித்தல் - ஒன்றிசேர்த்தல், புரட்சி செய்தல், இந்தியாவிற்கு வருகை, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காமை, ஆர்வமின்மை, காங்கிரஸ் தொடர்பு, கோகலேயின் உதவி, பயந்த சுபாவம், ஏழையைக் கண்டு இரங்குதல், போராடுதல், வெற்றி அடைதல், பழக்கப்படுதல், சச்சரவுகள், சமாதானம், இறுதியாக ஒரு புல்லட்!
இப்படி காற்புள்ளிகளுக்குள்ளேயே அடக்கிவிடுகிற வாழ்க்கை தான் என்று எண்ணிவிடலாம் இவரை. இத்தனையையும் அள்ளிப்போட்டுக் கொண்டு, இரத்தமும் சதையுமாக ஒரு மனிதன் வாழ்த்திருக்கிறான் என்றால், அதற்கு என்ன பெயர் சூட்டுவது? என்ன பட்டம் சாட்டுவது?
அகிம்சையை போதித்த மனிதர், துப்பாக்கியெடுத்து போராடுவதற்கும் ஆள் சேர்த்திருக்கிறார் என்பதெல்லாம் எத்தனை முரணான வாழ்க்கை. இதைப் படிப்போர் ஏளனம் செய்வார்கள் எனத் தெரிந்தும் குறிப்பிடும் உசிதம் காந்தியைத் தவிர வேறு எந்த மகாத்மாவுக்கு வரும். தென்னாப்பிரிக்காவில் ரெயிலில் பயணம் செய்த போது, நிறவெறியினால் தூக்கியெறிந்து வெளியே தள்ளிவிடப் பட்டிருக்கிறார். அங்குதான் காந்தி, மகாத்மா ஆக அடிகோலிய தருணமும் நிகழ்ந்தது!
தங்கம் கொஞ்சம் ஒடுங்கியிருந்தால், வேண்டாமென்று தூக்கியெறிந்து விடுவார் யாருமில்லை. அதை நெம்பிவிட்டு, பயன்படுத்தும் மனிதர்கள் தங்கம் - தங்கம்தானே என்று சொல்வது போலத்தான், காந்தி - காந்திதான். அவர்க்கு ஈடு, அவரே!
தென்னாட்டின் தலைமகன்
பன்னூறு ஆண்டுகளாய் அடிமைப்பட்ட சோகமே அறியாமல் வாழ்ந்து வந்தது தெற்கில் ஒரு பாமரக் கூட்டம். கால் முடப்பட்டால் கோல்கொண்டு நடக்கலாம், வாழ்வே முடப்பட்டால்? எழுது'கோல்' பிடித்து வளரலாம் என்று புத்துழி காட்டினார் இந்த அறிஞர். எழுத்தறிவித்தவனை இறைவன் என்றார்கள். பாவம். இவரோ இறை எதிர்ப்பாளார்! தாறுமாறாக தன்னையே எதிர்த்தவர் என்றும் சொல்லலாம்.
சாதிய கொடுமைகளால் பிரிந்து கிடந்த தெற்கின் தமிழ் பரப்பை தமிழென்ற ஒன்றை அடையாளத்தின்கீழ் கொண்டு வந்து மொழி அரசியலை மையப்படுத்தினார். தென்னாட்டின் பெர்னார்ட் ஷா என்று அழைக்கப்படும் அவர்தான் பேறிஞர் அண்ணாதுரை.
மனிதன் என்பவன் தான் மட்டும் தனியாக வளர்கிறான்; போராளி என்பவன் சமூகத்தை வளர்பிக்கிறான்; தலைவன் என்பவன் தலைமுறையையே வளர்பிக்கிறான். இவரின் தனிநாட்டுக் கோரிக்கையும், மாநில சுயாட்சியும் சுதந்திர காலந்தொட்டு இன்றுவரை பேசுபொருளாகவே இருக்கிறது.
இரவில் வெகுநேரம் கண்விழிக்கும் அண்ணா, அதிகாலை எழுந்திருத்து பழக்கமில்லாதவர். பின்னாளில் திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமாக உதயசூரியன் கிடைத்தது. "கட்சிக்குச் சின்னமா சூரியன் கிடைச்சும் அது உதயமாறதைப் பார்க்க ஒருநாளும் எயிந்திருக்க மாட்டேன்றானே" என்று புலம்புவார் அண்ணாவின் தாய்! தம்பிக்கு எழுதிய பல கடிதங்கள் இப்படி தான் முடியும், "தம்பி, சேவல் கூவுகிறது, நான் உறங்கச் செல்கிறேன்!"
சும்மாவா கிடைத்தது சுதந்திரம்? இந்தியத் தாயின் மாணம் பல நூறு விரல்களால் காக்கப்பட்டு கரைசேர்க்கப்பட்டிருக்கிறது; சில ஆயிர தாளிகளை தானம் கேட்டிருக்கிறது, பல லிட்டர் இரத்தங்களை முகர்ந்து குடித்திருக்கிறது. இருந்துமிந்த தேசம் இன்றுவரை தீராப் பசியுடன் காவு கேட்பது எதற்கு? தியாகிகளை நினைத்து நன்றாய் வாழுவோமே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக