"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்பதை தொடர் முயற்சிக்கான வெற்றுப் பழமொழியாகக் கருதவிட முடியாது. மனிதர்கள் பேசுவதற்கு முன்பாக தன்னுடைய உள்ளக்கருத்தை பிறரிடம் வரைந்து காட்டித் தான் வெளிப்படுத்தினர். பின் பேசத் தொடங்கினர், அதன் அடியாய் எழுத்தும் உருவானது. இப்படிப்பட்ட வரலாற்று எச்சங்களை ஒன்றுகூட்டி இயம்பி வருவதே இப்பழமொழி!
சமீபத்திய கீழடி அகழாய்வுகளில் பண்டையத் தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தமிழின் தொன்மையை மேலும் விசாலப்படுத்தி இருக்கின்றனர். "கீழடி எங்கள் தாய்மடி" என்று பெருமைப் பேசி வரும் நாம், எழுத்துத் தோன்றும் முன்னே தோன்றிய சித்திரங்களில் நமது ஆய்வுப்பார்வையை செலுத்தத் தவறிவிட்டோம்.
ஸ்பெயின் நாட்டு பாப்லோ பிக்காசோ 'கியூபிசம்' என்னும் உத்தியால் புகழ்பெற்றவர். இத்தாலி நாட்டு லியோனார்டோ டாவின்சியை, தன் ஓவியங்களில் விட்டுச்சென்ற வரலாற்று சங்கதிகளாலேயே ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளும் மெச்சிக்கொண்டு அலைகிறது. இதெல்லாம் 15 - 20ஆம் நூற்றாண்டிக்குள் ஏற்பட்ட ஓவியங்கள். கணக்கிடலங்காத காலத்தில் வரையப்பட்டு, ஒரு இனத்தின் தொன்மையை கணக்குள் அடங்க வைக்கும் சித்திரங்களை அவ்வினமே கரியைப் பூசி அழிக்குமென்றால் அது தமிழினம் தான்.
கோவைக்கும் பாலக்காட்டு கணவாய்க்கும் இடையே எழில் பொங்கும் குமுட்டிப்பதி கிராமம் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. அங்கு தான் பதிமலை என்றொரு குன்று இருக்கிறது. ஆதி காலத்தில் பல்லாயிர யானைகள் இருந்ததற்கும் சமீப காலங்களில் பலநூறு யானைகள் இறந்ததற்கும் இந்தக் குன்றே சான்று!
குமிட்டிப்பதி கிராமத்தில் ஆள் அரவமின்றி தனியார் பொறியியல் கல்லூரி மருங்கில் மறைந்திருந்தது பதிமலை. பயத்துடன் மெல்ல நடந்து சென்ற நமக்கு சிற்றுயிர்களின் சத்தம் மேலும் அச்சுறுத்தியது. மலையடிவாரத்தில் இருவர் தண்ணீர் பாட்டிலுடன் தங்கள் தின அலுவலை செய்துக் கொண்டிருந்தனர். ஆனால் குகைக்கு செல்லும் வழியை அவர்கள் தான் சரியாகக் காட்டினர்!
செல்லும் வழியொன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச் சின்னத்தை நோக்கி செல்வதாக இல்லை. ஒற்றை மனிதர் மட்டுமே செல்லும்படியாக புதர்களும் பூச்சிகளும் மண்டிக்கிடந்தது. சிறு தொலைவு பாறை மீது ஏறி சாகசம் செய்தபின் நம்மால் குகையிருக்கும் இடத்திற்கு குடிபுக முடிந்தது. அதற்குள் கைபேசி குறுஞ்செய்தி ஒன்று "வெல்கம் டூ ஜியோ - கேரளா". இனியும் தாமதித்தால், நம் வரலாறு நம் கையில் இல்லை என்று மேலும் முன்னேறி சென்றோம்.
ஆஹா கண்டுகொண்டோம்! பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர் சொல்ல வந்த செய்தி "ரங்கசாமி - தமயந்தி சுத்தியொரு ஹார்ட்டின்". வியக்க வேண்டாம்! வேற்றுகிரக வாசிகள் யாரும் வந்து குகையோவியங்களை சிதைக்கவில்லை. 1992- என்ற ஆண்டுக்குறிப்போடு மேற்குறிப்பிட்ட நபர் தான் சிதைத்துள்ளார். 'நமக்கு எதிரி வெளிய இல்லடா, உள்ளயே தான்' என்ற ஃபீலோடு ஓவியங்களை தேடினோம்.
யானை ஒன்றின் மேல் ஒருவன் அமர்ந்திருக்கும் படியும், சுற்றி குறுக்கும் நெடுக்குமான கோடுகளால் தேர் போன்று ஒரு ஓவியமும் இருந்தது. அதனை சுற்றி மேலும் பல சித்திரங்களை காணமுடிந்தது. ஆனால் அதைவிட அதிகமாக மது பாட்டில்களும், பொயலைப் பாக்கெட்களுமே இருந்தன! இது போதாதென கற்கள் கூட்டி அடுப்பு வைத்து குகை முழுவதும் கரியைப் பூசியுள்ளனர். இது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் மீதும் பூசப்பட்ட கரியென அங்கிருந்து வெளியேறினோம்.
இதுகுறித்து குளங்கள் பாதுகாப்பு இயக்கத்தை சார்ந்த மணிகண்டன், "இந்தப் பதிமலை குன்றில் காணப்படும் ஓவியங்கள் சுமார் 3500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இவை மூலம் இப்பகுதியில் பன்னெடுங்காலமாகவே யானைகள் இருந்து வருகின்றன என அறிய முடிகிறது. ஆனால் முறையான பராமரிப்பு இன்றி, நம்மவர்களாலே சிதைந்து வருகிறது. பலர் இந்த ஓவியங்களின் மீது தங்கள் பெயரை எழுதியும் கிறுக்கியும் வருகின்றனர். எனவே அரசு இதை மீட்டெடுத்து முறையாக பராமரித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்" என்றார்.
மேலும் தெளிவான புரிதலுக்காக தொல்லியல் ஆய்வாளர் ஜெகதீசனை அணுகியபோது, " இது இருளர் என்ற மலைவாழ் பகுதி மக்கள் வாழும் பகுதியாக இருந்தது, இருக்கிறது. இந்த ஊரின் பெயரிலுள்ள 'பதி' என்பது இருப்பிடம் என்ற பொருள் தரும். குமிட்டி என்ற தலைவனின் கீழ் இருந்ததால் 'குமிட்டிப்பதி' என்ற பெயர் பெற்றிருக்கும். இங்குள்ள பதிமலையில் காணப்படுபவை எழுத்து வடிவங்கள் அல்ல சித்திரங்கள் ஆகும். எனவே எழுத்து வடிவம் பிறக்கும் முன்னே அதாவது சங்க காலத்திற்கும் முன்பு தோன்றியது என அறுதியிட்டுக் கூறலாம். கருத்தை வெளிப்படுத்த மட்டுமின்றி அலங்கரிக்கவும் ஓவியங்களை வரைந்தனர்.
பொதுவாகக் குகை ஓவியம் இரண்டு வகைப்படும். ஒன்று வெள்ளை நிறத்தில் காணப்படுபவை, மற்றொன்று செந்நிறத்தில் புனையப்படுபவை. முன்னர் கூறப்பட்டது, செந்நிற வகையை விட இருநூறு - முந்நூறு ஆண்டுகள் பின் வந்தவை. குறிப்பாக இங்கு காணப்படும் ஓவியங்களில் யானை மீது தலைவன் நிற்பதும், மரம், மயில் ஒன்று தோகை விரித்து நிற்பதும் நன்றாக புலப்படும். சிலர் மயிலை தேர் என்றும் கூறுவர். ஆனால் குறிஞ்சி நிலத்திற்கு உகந்தப் பறவை என்று பார்க்கையில் அது மயிலாகத் தான் இருக்கும். குறைந்தபட்சம் 2500 ஆண்டுகளுக்கு முன்பாக வரையப்பட்ட இந்த ஒவியத்தை இன்று ஆய்வுக்கு உட்படுத்தினால் நம் வரலாற்றை மாற்றுப் பார்வையில் சிந்திக்க இது மேலும் வழிவகுக்கும்" என்றார்.
பேருந்துப் பயணச்சீட்டே இரண்டு வாரத்தில் அழிந்துவிடும் போது, 2500 ஆண்டுக்கு அப்பறமும் இது மட்டும் எப்படி அழியாம இருக்கு என்று கேட்கையில் மேலும் தொடர்ந்தார், " இது ஆய்வாளர்களிடைய குழப்பம் உடைய கேள்வி. நான் ஊகிக்கும் படி, அவர்களெல்லாம் குகையில் அசைவம் சமைத்து சாப்பிட்டவர்கள். அந்த அசைவத்தில் மீந்த எலும்புத்துண்டைப் பொடியாக்கி, கொழுப்பைக் கூழாக்கி அதனுடன் கலந்து வரைந்திருப்பர். கொடுமை என்னவெனில் இருண்ட காலம் என சொல்லப்படும் களப்பிரர் காலத்திலோ அந்நியப் படையெடுப்பிலோ அழியாத இந்த ஓவியங்கள் நாகரிகமடைந்த நம்மிடம் வந்து அழியப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை நாம் தான் மீட்க வேண்டும்" என்று முடித்தார்.
ஓவியங்கள் பற்றிய தெளிவான விளக்கம் பெற ஆய்வாளர் ஸ்டீபன் முடியரசிடம் கேட்டபோது, " யானைகளை அடக்கும் வகையான ஓவியம், பெரிய மரத் தேரைப் பலர் இழுப்பதான ஓவியம், மரம் போன்ற ஓவியம், இனக் குழுவின் நடனம் மற்றும் பெரிய மரம் ஒன்றும் குகை ஓவியங்களாக உள்ளது. மர வழிபாட்டு முறையை விளக்கும் ஓவியமாகவும் இதைக் கருத வாய்ப்பு உண்டு.
தலைவனைச் சுற்றிலும் சில மனிதர்கள் நிற்பதான ஓவியம் காணப்படுகிறது. இது தலைவனையும் அவனுக்கு கட்டுப்பட்ட வீரர்கள் போன்றும் உள்ளது. தலைவன் உருவம் சற்றுப் பெரியதாகவும் வீரர்களின் உருவம் சற்றுச் சிறியதாகவும் வரையப்படுவது பழங்கால குகை ஓவிய மரபேயாகும். ஊர் கூடி இழுக்கும் தேர் ஓவியம் ஊரின் ஒற்றுமை மற்றும் தெய்வ வழிபாட்டுத் துவக்கத்தை உணர்த்துவதாக காட்சியளிக்கிறது. குழு நடன ஓவியமானது வழிபாட்டுக் கொண்டாட்டம் அல்லது வேட்டையாடிய பின்னர் உணவு பகிர்தலுக்கான கொண்டாட்டமாக கருதலாம். இது புதியகற்காலத்தை சார்ந்தது" என்றார்.
கிராமத்தாரிடையே இக்குன்று பற்றிய பரவலான கதையொன்றும் இருந்து வருகிறது. "இதைப் பாண்டியன் மலை என்றும் சொல்வார்கள். அந்தக் காலத்தில் பாண்டியர்கள் போருக்கு செல்லும் முன், தங்கள் போர் உத்தியை விவாதிக்க அந்தக் குகையைத் தான் பயன்படுத்தி வந்தனர்." என்றார் ஒரு முதியவர்.
இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் வேலந்தாவளம் என்கிற ஊர் பதிமலை அருகில் இருக்கிறது. வேழன் என்றால் யானை. தாவளம் என்றால் பெருவழி அல்லது இருப்பிடம் என்று பொருள். வேழந்தாவளமே வேலந்தாவளமாக மருவியிருக்கும். எனவே யானைகள் மிகுந்தப் பகுதியாக கோவை இருந்துள்ளது என சிலர் கூறுகின்றனர்.
முன்னோர்கள் குகைகளில் தீமூட்டி சாப்பிட்டனர் என்பதால் நாமும் பண்பாடு மாறாமல் அங்கேயே சமைப்பது தவறில்லை. ஆனால் அந்தக் தீக்கரிகளில் நமது வரலாற்றையும் சேர்த்து மற(றை)ப்பது?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக