திங்கள், 31 ஆகஸ்ட், 2020

அவ்ளோதான் இந்தியா!

 மக்களை விட கடவுள் பெருசு என்று பேசுகிற நாடுதானே இது?

தாழ்த்தப்பட்ட தலீத்தைவிட பூனூல் அணிந்த பிராமணனே பெருசு என்று பீத்துகிற தேசந்தானே இது?

--

 சரி, உங்கள் நியாயப்படியே வருகிறேன். பாரத மாதா என்று பன்பெருங்காலமாக கட்டிக் காப்பாற்றிய உங்கள் ஹிந்து தேசம் அவமதிப்பிற்கு உள்ளாவதை விடவா இந்திய நீதித்துறை உங்களுக்குப் பெரிதாகிவிடப் போகிறது?


1971-ம் ஆண்டில் இயற்றப்பட்ட The Prevention Of Insults To National Honour Act-ன் படி, இந்திய தேசியக் கொடியின் மாண்பை தவறாகச் சித்தரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது. குற்றமிழைத்தவருக்கு குறைந்தது ஓராண்டு காலமாவது சிறைத்தண்டனை அளிக்க, அச்சட்டம் வழிவகுக்கிறது.


இந்திய என்பது பொதுவுடைமைச் சொத்து. அது, இந்தியர் அனைவருக்கும் உடைமையாகுகிற திடப்பொருள். 


நம் தாய் தந்தையிரை யாராவது பழித்தால் வேறு யாராவது வந்து அவரை அடிப்பார் என்று கைக்கட்டிப் பார்ப்போமா, என்ன? பொளீர்..'ன்று கண்ணத்தில் நான்கு விரல்களையும் பதிக்கமாட்டோம்?


இந்திய குடிமக்களுடைய அடிப்படை உரிமைகளின் பாதுகாவலனாகத் திகழும் உச்சநீதிமன்றம், அஃதே இந்திய குடிமக்களின் அடிப்படை கடமைகளில் ஒன்றான Abide by the Indian Constitution and respect its ideals and institutions, the National Flag and the National Anthem-ற்கு எதாவது ஒரு தீங்கு ஏற்படும் போது தானே முன்வந்து தேசிய முக்கிய வழக்காக எடுத்துரைக்காதா? 


நீதியரசர் பாப்டே பா.ஜ.க பிரமுகரின் பைக் மீதேறி பயணம் செய்கிறாரே, ஹெல்மெட்டாவது போட்டுக்கொள்ளக் கூடாது? என்று நன்னடைத்தையின் அடிப்படையில் பிரசாந்த் பூஷன் சொன்ன அறிவுரையை நீதிமன்ற அவமதிப்பாக, தாமே முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம்...


அதே தேசபக்தியை, அதே கோபத்தை, அதே வெறுப்புணர்வை கொஞ்சமாவது தேசியக் கொடியை அவமதிக்கும் பாசிச பா.ஜ.க கும்பல் மீது காட்டியிருக்க வேண்டாமா?


மன்னிப்பு கேளுங்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பூஷனை வற்புறுத்துகிறார்கள். ஏன் என்று கேட்கிறார் அவர். நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள் என்று பதில் வருகிறது. இல்லை.! நான் என்‌ மனச்சாட்சிக்கு உட்பட்டுத்தான் பேசியிருக்கிறேன் என்கிறார் இவர்.


ஒரு ரூபாய் அபராதம் செலுத்துமாறு உச்சநீதிமன்றம் அவரை கண்டிக்கிறது. தண்டனைத் தொகை 2000 என்று சட்டத்தில் இருக்கையில் ஒரு ரூபாய் என்ன? செத்துப்போன நீதித்துறைக்கு பிரசாந்த் பூஷனையே நெத்திக்காசு ஒட்டுச்சொல்லுகிறதா உச்சநீதிமன்றம்? 


மறுமுனை.. 

பாரதத்தின் அடையாளக் கொடிக்கு புதுவிதமான‌ விளக்கத்தை அளந்துவிட்ட எஸ்.வி.சேகரிடம் போலீசு கெஞ்சுகிறது, மன்னிப்பு மட்டும் கேளு சேகரு ப்ளீஸ்.. உன்னை கைதுலாம் பண்ண மாட்டேன். அவ்ளோதான்!

அவ்ளோதான் இந்தியா! 


தனிமனிதனை விட தேசம் பெரிது என்பார்கள், அந்தத் தனிமனிதன் தலீத்தாக இருக்கும் வரை.


தேசத்தைவிட தனிமனிதன் பெரிது என்பார்கள், அந்தத் தனிமனிதன் பிராமணனாக இருக்கும் வரை.


நீதித்துறையின் நடுவெலும்பை, தட்டித் தட்டியே நொறுக்கிவிட்டார்கள்.




திங்கள், 24 ஆகஸ்ட், 2020

கம்யூனிச நாய்கள்

 #Comrade_talk #Must_read #கம்யூனிச_நாய்கள்


• கம்யூனிசத்தால் தான் கம்யூனல் பிரச்சனை எல்லாம் உருவாகுது! 

• இந்தக் கம்யூனிச பதர்களுக்கு எப்போதும் போராடுவதேதான் வேலை!

• எந்தவொரு ஆக்கப்பூர்வ திட்டங்களுக்கும் முட்டுக்கட்டைப் போடுவதில்தான் இவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள்!

-----

 பெரும்பாலும் இஸ்லாத் மத பின்பற்றுநர்களை மதரீதியாகவும், பெண் பத்திரிகையாளர்களை பாலியல் ரீதியாகவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தாரை சாதி ரீதியாகவும் அச்சுறுத்துகிற ஹிந்துத்துவ கும்பல் பொதுவுடைமை தோழர்களை இந்தவொரு வசை வார்த்தையில்தான் பந்தாடுகிறது.


இதை விளக்குவதற்கு, நம்மை நாய்களுடன் ஒப்பிட விரும்புகிறேன். நாய்களா என்று சிறுமை பட வேண்டாம். எந்தவொரு நாயும் தன்னை மனிதனுடன் ஒப்பிட்டுக்கொள்ள விரும்பவில்லை. அந்த அளவுக்கு நாய்களாலேயே தீண்டப்படாத ஜென்மங்களாகத்தான் மனிதர்களாகிய நாம் இருந்து வருகிறோம். இந்நிலையில் நாய்களுடன் ஒப்பிடுவதன் மூலமாக மனிதர்களுக்கு பெருமையே அன்றி சிறுமை அல்ல.


சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்துகொண்டு, சகல செல்வத்தையும் தன் கைப்பையில் வைத்து சுகபோக வாழ்க்கையை நடத்தி வருமிவர்கள், கிட்டத்தட்ட பங்களா வீட்டில் வசிக்கும் உயர் ரக நாய்கள். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள். 


ஏனென்றால் இவர்கள் கூட ஒரு காலத்தில் மத்திய மற்றும் கிழக்கு ஆசிய பகுதிகளினின்று நாடோடியாக வந்து சேர்ந்த வந்தேறிகள் தானே! இன்றோ, வேடிக்கையாக முசல்மான்களை வந்தேறிகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறது, இந்த வந்தேறிக் கூட்டம். 


உண்மையில் இந்தத் துணைக்கண்டத்தில் நடந்து வருவது வந்தேறிகளுக்கு இடையேயான வர்க்கப் போராட்டமே ஒழிய, தாய்வழி நிலச் சமூக மீட்புப் போராட்டம் அல்ல. காரல் மார்க்சு இந்தியாவைப் பற்றி சொன்னது இது, " இந்தியர்களின் வரலாறு என்பது, இந்தியர் அல்லாதவர்கள் இந்தியாவை ஆண்டதும் அழித்ததும் தான்."


சரி மீண்டுமந்த நாய் கம்பேரிஷனுக்கே வருவோம். நம்முடைய நாட்டு நாய்கள் எத்தனை - எத்தனையோ வகை இருந்தாலும், எத்தனை வலிமையாக சண்டை செய்தாலும் கடல் கடந்து வந்த வேற்றுநாட்டு நாய்களைத் தான் கண்கவர்ந்து வாங்குகிறோம்.


இதே போன்றவொரு கண்கவர்ச்சியில் தான் ஆரியக் கும்பலுக்கு நாமொரு காலத்தில் அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டோம் என்பதை மறந்துவிடக்கூடாது!


சிம்ம சொப்பனமாக, இருந்த இடத்திலேயே சில சோற்றுக் குண்டான்களை ஏப்பம் விடுகிறது, இந்த உயர்ரக நாய்கள். அதாவது, இருந்த இடத்திலேயே ஒரு சொட்டு வியர்வை சிந்தாமல் சுவர்கலோக அமைதியை அனுபவித்து, பணம் சேகரிக்கிற பார்ப்பன கும்பலின் அதே கபளீகரம் செய்கிற குணம்!


ஆனால் மறுமுனையில் உள்ள நம்முடைய பூர்வ குடிகளான நாட்டு நாய்களைப் பாருங்கள், ஒருவேளை சோற்றுக்கே ஓயாது ஓட வேண்டியிருக்கிறது. தன் பொழுதுகளை சொரிப்பிடித்த உடம்போடு சாக்கடைகளில் கழிக்க வேண்டியிருக்கிறது; அப்படியே அரிதாக உணவு ஏதும் கிடைத்தாலும் தன் இனத்துடனேயே அது சண்டையிட்டு வெற்றிக்கொண்டு பசியாற வேண்டியிருக்கிறது. இப்படியான வயிற்றுப்பசி போராட்டத்தில்தான் வர்ண பிரிவினைகள் ஏற்பட்டன போலும்.


கடந்த பத்தியில் நான் சொன்னது, 600-700 ஆண்டுகால ஆரிய - திராவிட வரலாற்றின் கையடக்க வெர்ஷன். இனக் கவர்ச்சியால் சொந்த அடையாளத்தையே இழந்து வருகிறோம். இந்தக் கோர முகத்தால் என்னவென்ன பிரச்சனைகளை சந்திக்கிறோம் என்று என்றாவது நீங்கள் சிந்தித்தது உண்டா? 


அத்தனை விலை கொடுத்து வேற்று நாட்டு நாய்களை பகுமானமாக வாங்கி வீட்டில் வைக்கிறோமே, அவாக்கள் என்ன செய்து விட்டன‌? 


வீட்டிற்கே ஒரு திருடன்‌ வருகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆரம்பத்தில் லொல்.. லொல்..‌ என்று தனக்கே உரித்தான ஆணவத்துடன் குரைக்கிறது. இதை நான் ஆணவம் என்றே பதிவு செய்ய விரும்புகிறேன். எஜமான விஸ்வாசம்‌ என்பது முற்றிலும் வேறு. திருட வந்த அவன், அந்த நாயிற்கு பிடித்தமான பண்டமொன்றை வீசிவிட்டால் போதும் வாலைச் சுருட்டிக்கொண்டு திருடன் காலுக்குள் பதுங்கிக்கொள்ளும். 


பன்னெடுங்காலமாக ஆண்டுவரும் இந்த ஆரியக் கும்பலும் இதையேதான் செய்கிறது, அயல்நாட்டுக் கம்பெனிகளிடமிருந்து வரும் அழிவுத் திட்ட ஒப்பந்தங்களை பேரம் பேசி பைக்குள் போட்டு தொப்பை வளர்க்கிறது. 

இவைகளுக்கு நம்மூர் கிளைமட்டும் ஒத்துவராது, நம்மூர் உணவும் ஒத்துவராது. நாய்களுக்கு உணவு வழங்கவே வெளிநாட்டு நிறுவனங்களை நாம் முதலீடு செய்ய அழைக்க வேண்டுமாம். இவர்கள் வயிறு வளர்க்க, நாம உயிர்களை இழக்க வேண்டுமாம்! 


மறுமுனையில் உள்ள பசித்த ஏழை நாய்களுக்கோ, தெருவிற்குள் ஒரு புதுவாசனை வந்தாலே போதும். உடனே கூட்டங்கூடி ஒன்று சேர்ந்து குரைந்து, புதிதாக வருபவனை ஒரு பாடுபடித்திவிடும்.


இந்தியத் துணைக் கண்டத்தில் தோராயமாக 18-ம் நூற்றாண்டிலிருந்தே இதைத்தான் எங்கள் ஏழைக் கம்யூனிச இயக்கங்கள் செய்து வருகின்றன. இவர்களுக்கு பண்டமாசையும் பணத்தாசையும் காட்டி ஏய்க்க முடியாது! 


சிலர் துப்பாக்கி ஏந்தி, அரசுக்கு எதிராகவே போராடுகின்றனரே! எதற்கு இம்சை முறைகளை பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்கள்..


வெகு நாட்களாகத் தெருவிலேயே தங்கிக் கிடந்த எங்கள் ஏழை நாய்களுக்கு போதிய ஊட்டச்சத்தை நீங்கள் வழங்காததால்; போதிய ஆரோக்கியத்தை நீங்கள் உறுதி செய்யாததால்; போதிய பாதுகாப்பை நீங்கள் வழங்க மறுத்ததால் வெரிப்பிடித்து அலைகிறோம். 


உங்கள் ஆரியக் கும்பலிடம் சொல்லிவையுங்கள், வீட்டிற்குள் ஒரு வீடு வைத்து, தனியாக தட்டு வைத்து, அதற்கென்று பண்ட பாத்திரங்களெல்லாம் பார்த்து வைத்து, இரும்புக் கதவுக்குள் பத்திரமாகத்தானே இருக்கிறோம் என்று வாய்க்கொழுப்பு எடுத்து திரியாதீர்கள். 


என்றேனும் ஒருநாள் நீங்கள் கழுத்துப்பட்டையை கலட்டிவிட்டு வெளியே வரத்தான் வேண்டும். அகோரப் பசியுடன் காத்துக் கிடக்கும் எங்கள் தெருநாய்க் கூட்டம், உங்கள் வேதம் சொல்வது போல நெருப்புக்கு ஆகுதி ஆக்கினாலும் சரி, எங்கள் நாட்டார் வழிபாடு சொல்வது போல இரத்தக்காவு வாங்கினாலும் சரி எதேனும் ஒன்றை நிச்சயம் செய்தேத்தீரும்!


அப்போது உங்கள் பூனூலை மட்டுமாவது பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள், இம்முறை உங்கள் மார்பில் அல்ல, கழுத்தில் கட்டிக்கொள்ள!

பதிவு : Satheesh Selva Kumar

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

``மழைநீரைச் சேமிக்கச் சொல்றீங்க... ஆனா, தூரேவாரலையே!'' - அமைச்சர் வேலுமணிக்கு ஒரு கடிதம்

 

ஏனுங்க எஸ்.பி.வேலுமணி சார், வணக்கமுங்க!

குசும்புகளுடன் கோயம்புத்தூர்க்காரன் எழுதுவது,

`நமக்காக, நாட்டுக்காக, நாளைக்காக'ன்னு நீங்க வீடியோ மூலமா தொடங்கிவச்ச ரெயின் வாட்டர் சேலஞ்ச், பட்டிதொட்டியெல்லாம் வைரலாகிட்டு வருதுங்க. அதுலயும் வெள்ளியங்கிரி மலையிலிருந்து பெருக்கெடுத்து வரும் நொய்யல் ஆத்துநீர கரையோர சனம், அம்புட்டு பகுமானமா சேமிக்கத் தொடங்கிடுச்சுனா பாருங்க! சிலர் வீட்ல மழைநீர் சேமிக்கிறாங்க; சிலர் வீட்டையே மழைநீரில் இருந்துதான் சேமிக்கிறாங்க. என்ன அந்தச் சாகசத்துலதான், அங்க இங்கனு உயிர்ச் சேதம் ஆகிப்போச்சாக்குங்க...


Click here to read more

குமிட்டிபதி குகைகள்

 

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்பதை தொடர் முயற்சிக்கான வெற்றுப் பழமொழியாகக் கருதவிட முடியாது. மனிதர்கள் பேசுவதற்கு முன்பாக தன்னுடைய உள்ளக்கருத்தை பிறரிடம் வரைந்து காட்டித் தான் வெளிப்படுத்தினர். பின் பேசத் தொடங்கினர், அதன் அடியாய் எழுத்தும் உருவானது. இப்படிப்பட்ட வரலாற்று எச்சங்களை ஒன்றுகூட்டி இயம்பி வருவதே இப்பழமொழி! 


சமீபத்திய கீழடி அகழாய்வுகளில் பண்டையத் தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தமிழின் தொன்மையை மேலும் விசாலப்படுத்தி இருக்கின்றனர். "கீழடி எங்கள் தாய்மடி" என்று பெருமைப் பேசி வரும் நாம், எழுத்துத் தோன்றும் முன்னே தோன்றிய சித்திரங்களில் நமது ஆய்வுப்பார்வையை செலுத்தத் தவறிவிட்டோம்.


ஸ்பெயின் நாட்டு பாப்லோ பிக்காசோ 'கியூபிசம்' என்னும் உத்தியால் புகழ்பெற்றவர். இத்தாலி நாட்டு லியோனார்டோ டாவின்சியை, தன் ஓவியங்களில் விட்டுச்சென்ற வரலாற்று சங்கதிகளாலேயே ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளும் மெச்சிக்கொண்டு அலைகிறது. இதெல்லாம் 15 - 20ஆம் நூற்றாண்டிக்குள் ஏற்பட்ட ஓவியங்கள். கணக்கிடலங்காத காலத்தில் வரையப்பட்டு, ஒரு இனத்தின் தொன்மையை கணக்குள் அடங்க வைக்கும் சித்திரங்களை அவ்வினமே கரியைப் பூசி அழிக்குமென்றால் அது தமிழினம் தான்.


கோவைக்கும் பாலக்காட்டு கணவாய்க்கும் இடையே எழில் பொங்கும் குமுட்டிப்பதி கிராமம் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. அங்கு தான் பதிமலை என்றொரு குன்று இருக்கிறது. ஆதி காலத்தில் பல்லாயிர யானைகள் இருந்ததற்கும் சமீப காலங்களில் பலநூறு யானைகள் இறந்ததற்கும் இந்தக் குன்றே சான்று!


குமிட்டிப்பதி கிராமத்தில் ஆள் அரவமின்றி தனியார் பொறியியல் கல்லூரி மருங்கில் மறைந்திருந்தது பதிமலை. பயத்துடன் மெல்ல நடந்து சென்ற நமக்கு சிற்றுயிர்களின் சத்தம் மேலும் அச்சுறுத்தியது. மலையடிவாரத்தில் இருவர் தண்ணீர் பாட்டிலுடன் தங்கள் தின அலுவலை செய்துக் கொண்டிருந்தனர். ஆனால் குகைக்கு செல்லும் வழியை அவர்கள் தான் சரியாகக் காட்டினர்!


செல்லும் வழியொன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச் சின்னத்தை நோக்கி செல்வதாக இல்லை. ஒற்றை மனிதர் மட்டுமே செல்லும்படியாக புதர்களும் பூச்சிகளும் மண்டிக்கிடந்தது. சிறு தொலைவு பாறை மீது ஏறி சாகசம் செய்தபின் நம்மால் குகையிருக்கும் இடத்திற்கு குடிபுக முடிந்தது. அதற்குள் கைபேசி குறுஞ்செய்தி ஒன்று "வெல்கம் டூ ஜியோ - கேரளா". இனியும் தாமதித்தால், நம் வரலாறு நம் கையில் இல்லை என்று மேலும் முன்னேறி சென்றோம்.


ஆஹா கண்டுகொண்டோம்! பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர் சொல்ல வந்த செய்தி "ரங்கசாமி - தமயந்தி சுத்தியொரு ஹார்ட்டின்". வியக்க வேண்டாம்! வேற்றுகிரக வாசிகள் யாரும் வந்து குகையோவியங்களை சிதைக்கவில்லை. 1992- என்ற ஆண்டுக்குறிப்போடு மேற்குறிப்பிட்ட நபர் தான் சிதைத்துள்ளார். 'நமக்கு எதிரி வெளிய இல்லடா, உள்ளயே தான்' என்ற ஃபீலோடு ஓவியங்களை தேடினோம். 


யானை ஒன்றின் மேல் ஒருவன் அமர்ந்திருக்கும் படியும், சுற்றி குறுக்கும் நெடுக்குமான கோடுகளால் தேர் போன்று ஒரு ஓவியமும் இருந்தது. அதனை சுற்றி மேலும் பல சித்திரங்களை காணமுடிந்தது. ஆனால் அதைவிட அதிகமாக மது பாட்டில்களும், பொயலைப் பாக்கெட்களுமே இருந்தன! இது போதாதென கற்கள் கூட்டி அடுப்பு வைத்து குகை முழுவதும் கரியைப் பூசியுள்ளனர். இது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் மீதும் பூசப்பட்ட கரியென அங்கிருந்து வெளியேறினோம்.


இதுகுறித்து குளங்கள் பாதுகாப்பு இயக்கத்தை சார்ந்த மணிகண்டன், "இந்தப் பதிமலை குன்றில் காணப்படும் ஓவியங்கள் சுமார் 3500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இவை மூலம் இப்பகுதியில் பன்னெடுங்காலமாகவே யானைகள் இருந்து வருகின்றன என அறிய முடிகிறது. ஆனால் முறையான பராமரிப்பு இன்றி, நம்மவர்களாலே சிதைந்து வருகிறது. பலர் இந்த ஓவியங்களின் மீது தங்கள் பெயரை எழுதியும் கிறுக்கியும் வருகின்றனர். எனவே அரசு இதை மீட்டெடுத்து முறையாக பராமரித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்" என்றார். 


மேலும் தெளிவான புரிதலுக்காக தொல்லியல் ஆய்வாளர் ஜெகதீசனை அணுகியபோது, " இது இருளர் என்ற மலைவாழ் பகுதி மக்கள் வாழும் பகுதியாக இருந்தது, இருக்கிறது. இந்த ஊரின் பெயரிலுள்ள 'பதி' என்பது இருப்பிடம் என்ற பொருள் தரும். குமிட்டி என்ற தலைவனின் கீழ் இருந்ததால் 'குமிட்டிப்பதி' என்ற பெயர் பெற்றிருக்கும். இங்குள்ள பதிமலையில் காணப்படுபவை எழுத்து வடிவங்கள் அல்ல சித்திரங்கள் ஆகும். எனவே எழுத்து வடிவம் பிறக்கும் முன்னே அதாவது சங்க காலத்திற்கும் முன்பு தோன்றியது என அறுதியிட்டுக் கூறலாம். கருத்தை வெளிப்படுத்த மட்டுமின்றி அலங்கரிக்கவும் ஓவியங்களை வரைந்தனர்.


பொதுவாகக் குகை ஓவியம் இரண்டு வகைப்படும். ஒன்று வெள்ளை நிறத்தில் காணப்படுபவை, மற்றொன்று செந்நிறத்தில் புனையப்படுபவை. முன்னர் கூறப்பட்டது, செந்நிற வகையை விட இருநூறு - முந்நூறு ஆண்டுகள் பின் வந்தவை. குறிப்பாக இங்கு காணப்படும் ஓவியங்களில் யானை மீது தலைவன் நிற்பதும், மரம், மயில் ஒன்று தோகை விரித்து நிற்பதும் நன்றாக புலப்படும். சிலர் மயிலை தேர் என்றும் கூறுவர். ஆனால் குறிஞ்சி நிலத்திற்கு உகந்தப் பறவை என்று பார்க்கையில் அது மயிலாகத் தான் இருக்கும். குறைந்தபட்சம் 2500 ஆண்டுகளுக்கு முன்பாக வரையப்பட்ட இந்த ஒவியத்தை இன்று ஆய்வுக்கு உட்படுத்தினால் நம் வரலாற்றை மாற்றுப் பார்வையில் சிந்திக்க இது மேலும் வழிவகுக்கும்" என்றார்.


பேருந்துப் பயணச்சீட்டே இரண்டு வாரத்தில் அழிந்துவிடும் போது, 2500 ஆண்டுக்கு அப்பறமும் இது மட்டும் எப்படி அழியாம இருக்கு என்று கேட்கையில் மேலும் தொடர்ந்தார், " இது ஆய்வாளர்களிடைய குழப்பம் உடைய கேள்வி. நான் ஊகிக்கும் படி, அவர்களெல்லாம் குகையில் அசைவம் சமைத்து சாப்பிட்டவர்கள். அந்த அசைவத்தில் மீந்த எலும்புத்துண்டைப் பொடியாக்கி, கொழுப்பைக் கூழாக்கி அதனுடன் கலந்து வரைந்திருப்பர். கொடுமை என்னவெனில் இருண்ட காலம் என சொல்லப்படும் களப்பிரர் காலத்திலோ அந்நியப் படையெடுப்பிலோ அழியாத இந்த ஓவியங்கள் நாகரிகமடைந்த நம்மிடம் வந்து அழியப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை நாம் தான் மீட்க வேண்டும்" என்று முடித்தார். 


ஓவியங்கள் பற்றிய தெளிவான விளக்கம் பெற ஆய்வாளர் ஸ்டீபன் முடியரசிடம் கேட்டபோது, " யானைகளை அடக்கும் வகையான ஓவியம், பெரிய மரத் தேரைப் பலர் இழுப்பதான ஓவியம், மரம் போன்ற ஓவியம், இனக் குழுவின் நடனம் மற்றும் பெரிய மரம் ஒன்றும் குகை ஓவியங்களாக உள்ளது. மர வழிபாட்டு முறையை விளக்கும் ஓவியமாகவும் இதைக் கருத வாய்ப்பு உண்டு.


தலைவனைச் சுற்றிலும் சில மனிதர்கள் நிற்பதான ஓவியம் காணப்படுகிறது. இது தலைவனையும் அவனுக்கு கட்டுப்பட்ட வீரர்கள் போன்றும் உள்ளது. தலைவன் உருவம் சற்றுப் பெரியதாகவும் வீரர்களின் உருவம் சற்றுச் சிறியதாகவும் வரையப்படுவது பழங்கால குகை ஓவிய மரபேயாகும். ஊர் கூடி இழுக்கும் தேர் ஓவியம் ஊரின் ஒற்றுமை மற்றும் தெய்வ வழிபாட்டுத் துவக்கத்தை உணர்த்துவதாக காட்சியளிக்கிறது. குழு நடன ஓவியமானது வழிபாட்டுக் கொண்டாட்டம் அல்லது வேட்டையாடிய பின்னர் உணவு பகிர்தலுக்கான கொண்டாட்டமாக கருதலாம். இது புதியகற்காலத்தை சார்ந்தது" என்றார்.


கிராமத்தாரிடையே இக்குன்று பற்றிய பரவலான கதையொன்றும் இருந்து வருகிறது. "இதைப் பாண்டியன் மலை என்றும் சொல்வார்கள். அந்தக் காலத்தில் பாண்டியர்கள் போருக்கு செல்லும் முன், தங்கள் போர் உத்தியை விவாதிக்க அந்தக் குகையைத் தான் பயன்படுத்தி வந்தனர்." என்றார் ஒரு முதியவர். 


இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் வேலந்தாவளம் என்கிற ஊர் பதிமலை அருகில் இருக்கிறது. வேழன் என்றால் யானை. தாவளம் என்றால் பெருவழி அல்லது இருப்பிடம் என்று பொருள். வேழந்தாவளமே வேலந்தாவளமாக மருவியிருக்கும். எனவே யானைகள் மிகுந்தப் பகுதியாக கோவை இருந்துள்ளது என சிலர் கூறுகின்றனர். 


முன்னோர்கள் குகைகளில் தீமூட்டி சாப்பிட்டனர் என்பதால் நாமும் பண்பாடு மாறாமல் அங்கேயே சமைப்பது தவறில்லை. ஆனால் அந்தக் தீக்கரிகளில் நமது வரலாற்றையும் சேர்த்து மற(றை)ப்பது?

நவீன இந்தியாவின் சிற்பிகள்

 

ஒருநாள் சூரியனில் இருந்து பூதாகரமாக வெடித்துச் சிதறி வந்தது தானே பூமி? வேண்டாம் என்று சூரியன் ஒதுக்கித் தள்ளியதில் வந்த பூமியில், தங்கமென்றும் வைரமென்றும் வளங்களை கொடுத்தது கடவுளா என்ன? எண்ணம் தான்! நாம் வேண்டாம் என்று குப்பையில் வீசும் பண்டங்கள் கூட, பலருக்கு பிரயோஜனம் ஆவதுபோல, உமிழ்ந்து தள்ளிய பூமியில் தங்கள் வாழ்க்கையை நடத்தவந்த அன்றாடங்காட்சிகள் தானே இந்த மனிதர்கள்! 


யாரும் சூடவில்லை என்றால் என்ன, அரளிச்செடிகள் பூக்கத்தானே செய்கின்றன? மனிதன் தோன்றுவதற்கு முன்பு, பூமியும் அப்படித்தான் ஒருவேளை வாழ்ந்திருக்கும். கடவுள் என்கிற கணவான் ஒருவேளை உயிருள்ளவராக இருந்திருந்தால், இத்தனை கல்நெஞ்சத்தோடு உயிர்வாழ்ந்திருக்க முடியாது. அதனால் தான் என்னவோ கற்களினாலே அவருக்கு சிலை வைத்துவிட்டனர். ஆயிரமாயிரம் தவறுகளை செய்துப் பழகிய பின் மனிதன் அடுத்த முறையும் தவறு செய்யவே விழைகிறான், ஆனால் அதை சரியாக செய்ய முற்படுகிறான். அவை தான் மனிதகுலத்தின் வரலாறாக இன்றுவரை இருக்கிறது. ஏனெனில் உலகம் தோன்றிய காலம் முதல், எந்த ஒரு கொள்கையும் இன்றுவரை அனைவராலும் அரவணைக்கப்பட்டதாக சான்றே இல்லை. 


அதனால் தானே இயேசுவும் அல்லாவும் சிவனும் புத்தனும் பிறந்தார்கள். துறவு, சூபி, ஜென் என எல்லா குருக்களின் மார்கத்திலும் மாயை என்கிற வார்த்தை மாறாமல் இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை எல்லாம் மாயை தான். 


ஒரு நன்கு பழுத்த இலை வந்து விழுகும் வரை, நதி குழப்பம் அடையாமல் தான் ஓடிக்கொண்டிருக்கும். "Rome was not built in a day" என்ற சொலவடையை ஆங்கிலத்தில் மிகப் பிரபலமாக சொல்வார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகம் என்பது சூரியனின் குப்பைத் தொட்டி என்றவர்கள், சிற்சில ஆண்டுகளுக்குப் பிறகு அமைதியான அடர்வனம் என்றனர் ; ஆண்டுகள் கடந்ததும் பூச்சிகளின் புகலிடம் என்றனர்; பின்னர் குரங்களின் கூடாரம் என்றனர்; நாட்கள் சென்ற பிறகு வெறிப்பிடித்த மனிதர்களின் பேராசைப் பந்து என்றனர். 


ஆக காலத்திற்கு ஒரு பதிலைத் தரும் பூமி, என்றைக்குமே நிலையானதாக இருந்ததில்லை. கோசாம்பியின் வார்த்தைகளில் சொன்னால், "பொற்காலம் என்ற ஒன்று என்றைக்குமே இருந்ததல்ல." நேற்று என்பது கடந்தவிட்ட காலம் தான்; இறந்துவிட்ட நேரம் தான். உயிர் பிறந்த உடலை அத்தனை சாத்திரம் செய்து அடக்கம் செய்வது எதிர்காக? எதிர்காலத்திற்காகவா? இறந்தவரின் நிகழ்காலத்தை எண்ணிதானே? அப்படியாகத்தான் நாடு நிலையற்றது என்றாலும், அதன் பழைய நிலைகளை விலையில்லாமல் கட்டிய சில சிற்பிகளை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியது கட்டாயமாகிறது. இந்தியாவின் ஒவ்வொரு செங்கல்லையும் காலம் மெனக்கெட்டு கட்டியிருக்கும் அந்தச் சிற்பிகள், தேச வரலாற்றில் சில ஆயிரப் பக்கங்களில் என்றென்றைக்குமாக குடியிருக்க உரிமைப்பட்டவர்கள்.


ஒரு நாடு என்பது வெறும் உயிருள்ள மக்களும் மிருகங்களும் அடங்கிய சரணாலயம் அல்ல; உயிரற்ற பிராணிகள் அண்டியுள்ள அருங்காட்சியகமும் அல்ல; மாறாக அது உயிருள்ள, உயிரற்ற அத்தனையுமாக வாழ்ந்து முடிந்த, வாழ்ந்து கொண்டிருக்க, வாழவிருக்க மக்களும் மிருகமும் இயற்கையும் எண்ணமும் அணுவும் நீக்கமற கலந்திருக்கும் ஒரு மந்திரப் பெட்டகம். அது அணு போன்றது, வெறுங்கண்ணால் பார்த்தால் அதில் ஒன்றும் தெரியாது. அதை பார்ப்பதற்கு நமக்கு புத்தகம் என்னும் பூதக்கண்ணாடி தேவைப்படுகிறது. 


"உப்பானது சாரமற்றுப்போனால் அது எதனால் சாரமேற்றப்படும்" என்ற பைபிள் வசனத்திற்கு ஏற்ப ஈடுயினையே அற்ற 19 பேர்களை நவீன இந்தியாவின் சிற்பிகளென அடையாளம் காட்டுகிறார் உலகறிந்த வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா. 


மரப்பாச்சி பொம்மையை கட்டிப்பிடித்து உறங்கும் ஒரு கிராமத்துச் சிறுவனைப் போல, 9 இரவுகள் இந்தப் புத்தகத்தோடு தனிமையைக் கழித்திருக்கும் ஒரு 20 வயது கன்னிப் பையனை என்னென்ன செய்யவேண்டுமோ, அத்தனையும் செய்து அறிவைச் சூறையாடி, இந்திய தேசத்தின் ஆழமானப் புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது இந்தப் புத்தகம். 


19 நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டு வரை செல்ல காலரீதியாக பார்த்தால் 100 ஆண்டுகள் போதும். குடும்ப ரீதியாக பார்த்தால் 3 தலைமுறை போதும். கட்டுமான ரீதியாக பார்த்தால், பல்லாயிர சிந்தனையாளர்களின் பலகோடி எண்ணங்கள் வேண்டும். அத்தனையையும் கைக்குள் அடக்கி ருசித்து குடிக்க வேண்டுமா? 


எண்ணத்தோடு நிற்காமல், செயலிலும் புரட்சி செய்தவர்களின் நினைவை பதிவிட மே - 1 விட சிறந்த நாள் வேறில்லை. ஒவ்வொரு இளம் புரட்சியாளனும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் "நவீன இந்தியாவின் சிற்பிகள்". 

சுதந்திர போராட்டம் - நினைவேந்தல்



 "அவன் 

 ஒரு பட்டுவேட்டி பற்றிய

 கனாவில் இருந்தபோது 

 கட்டியிருந்த கோவணம்

 களவாடப்பட்டது.."


இந்திய சுதந்திரத்தை இப்படியாகத்தான் பதிவு செய்கிறார் சமகாலக் கவிஞர் ஒருவர்.‌ அன்று இல்லாத ஒரு தேசத்தை, தன் இரும்புகைகளுக்குள் கட்டிவைத்திருந்தது ஆங்கிலேய கைவிலங்கு. அதை ஓங்கியுடைக்க இரும்பை விட வலிமையான ஆயுதம் வேண்டுமென்றார்கள் சிலர். அணுகுண்டே போதாது என்றார்கள் பலர்.‌ இந்த முரண்பாடுகளுக்கு மத்தியில் காந்தி என்றொரு காகிதப்பூ வாசமில்லாமல் பூத்தது. அது காகிதமானதால் எல்லாவற்றையும் தன்னுள் எழுதிக்கொண்டது; வெறுப்புகள் சேர்ந்தால் அழித்துக் கொண்டது; தவறுகள் சேர்ந்தால் திருத்திக் கொண்டது; ஆனால் பறப்பதை மட்டும் நிறுத்திக் கொள்ளவே இல்லை. இப்படியான பல காகிதங்களால் தான் இந்தியா என்றொரு தேசம் இன்று கண்முன் கிடக்கிறது. 


"இந்திய தேசத்தின் வரலாறு என்பது, இந்தியர் அல்லாதவர்கள் இந்தியாவை ஆண்டது தான்" என்கிறார் கார்ல் மார்க்ஸ். அப்படியாக நம் வரலாறு எழுதப்பட்டுவிடக்கூடாது. இந்தியா ஒரு உயிரி. அதன் ரத்தநாளங்கள் சிந்து நதியாகவும் காவிரி நதியாகவும் பாய்ந்துகொண்டிருக்கிறது; காஷ்மீரகக் குளிரில் உச்சந்தலை குளித்துவிட்டு, கன்னியாகுமரி கடலில் உள்ளங்கால் அலசுகிறது இந்நாடு; 29 மா-நிலங்களும் மா-தவங்கள் செய்தளித்த தவப்புதல்வர்களால் தான் இத்தேசம் கொண்டுகூட்டப்பட்டுள்ளது! 


காஷ்மீரக சிங்கங்கள்

 

 காஷ்மீர் என்ற பிரதேசம் பாலைவனப் பனியால் மட்டுமல்ல, பலநூறு இரத்தக்கறையாலும் ஆனது. எந்த பணித்தலும் இல்லாமல் இரண்டு தலைவர்களை இந்தியாவிற்கு அர்ப்பணித்தது. ஒன்று ஷேக் அப்துல்லா, மற்றொன்று நேரு; ஒருவர் இஸ்லாம், மற்றொருவர் ஹிந்து; ஒருவர் காஷ்மீருக்காகவே போராடியவர், மற்றொருவர் காஷ்மீருக்காகவும் போராடியவர். இருவருக்கும் உள்ள வித்தியாசம் இவ்வளவே. ஒற்றுமையோ ஒருநூறு. மதச்சார்பற்ற, மாண்புறு அறிவுடையாளர்கள்! ஒருவர் காஷ்மீரக பிரதமரானர், மற்றொருவர் இந்தியாவின் பிரதமரானார். அப்படியாக இரு பிரதமர்களை இந்தக் காஷ்மீரகப் பள்ளத்தாக்கு பெற்றெடுத்திருக்கிறது.


இந்துத்துவமாகயிருந்த தேசத்தை இழுத்துப்பிடித்த அருமையும், இங்கிலீஷ்காரனை எட்டிமிதித்த பெருமையும் நேருவையே சாரும். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையிலேயே செலவிட்டாலும், தன் மகளுக்குப் பாடம் எடுக்கக் கூட நேரமில்லாது போனாலும் கடிதப் போக்குவரத்தின் மூலமே காலத்தை நகர்த்தியவர் நேரு. இந்த உத்தமச்சீலரின் பிறந்தநாளை கொண்டாட, குழந்தைகள் கொடுத்துவைத்திருக்க வேண்டும்!


பஞ்சாப்பின் பண்பாளர்


இன்குலாப் ஜிந்தாபாத் என்ற வார்த்தைக்குள் ஆயிரம் வாரணங்களின் அசாத்திய சக்தி அடங்கியிருக்கிறது. பதின்பரும வயதிலேயே நாட்டு சுதந்திரத்திற்காக போராடத் தொடங்கிய பகத் சிங்கை பெற்றடுத்த மண் இந்த பஞ்சாப். சூடான இளரத்தம் எப்படியிவரை சும்மா அமரவைக்கும்? வீரதீர செயல் செய்தார். பிரிட்டிஷ் அதிகாரியை கொன்று வீசினார். தூக்கிலிடப்படும் சதியொன்று தூங்கும் வேலையில் வந்துசேர்ந்தது. ஓடாமல், ஒளியாமல் தூக்கு மேடையை சிரிப்புடன் வரவேற்றார்.


தன் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றும் வயதில், நாட்டிற்கு உயிர்விட்ட நால்வர்களை என்னென்ன சொல்லி நாம் பாராட்ட வேண்டும். இத்தனை அரும்பாடு பட்டும், சுதந்திர நாட்டின் மூச்சுக்காற்றை அவர்கள் சுவாசிக்கமலேயே உயிர்விட்டார்கள். இந்தியாவின் எலும்பானது சுக்குநூறான பல இளைஞர்களின் மாமிசத்தை தின்றுத் தின்றுதான் மஞ்சைத் தீட்டியிருக்கிறது.



உத்தரவாதமளித்த உத்திரப் பிரதேசம்


1757-யும் 1857-யும் அவ்வளவு எளிதில் இந்தியர்கள் மறக்க முடியாது. முந்தையது இந்தியா அடிமையான வரலாறு, பிந்தையது இங்கிலாந்து அடிபணிந்த வரலாறு.‌ ஆங்கிலேய அடிவருடிகள் சிப்பாய் கிளர்ச்சி என்றாலும் முதல் சுதந்திரப் போர் என்றே தேசப்பற்றுள்ள தேகங்கள் தெம்போடு சொல்கிறது.


1857 புரட்சியின் நாயகன் மங்கல் பாண்டியும், புரட்சி நாயகி ராணி லட்சுமி பாயும் வாழ்ந்த உத்தம தேசம் இந்த உத்திரப் பிரதேசம். வரலாற்றின் பக்கங்களில் உத்திரப் பிரதேசமானது உதிரம் சொட்டி எழுதப்பட்டிருக்கிறது. இங்கு 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 19-ம் நூற்றாண்டின் இறுதிவரை துறைவாரியான வீரர்கள் ஏராளமாக கிடைக்கின்றனர். மீசை முளைக்காத குழந்தையை போருக்கு அனுப்பியது தமிழர் நெறி என்றால், கைக்குழந்தையைக் கூட போருக்கு அழைத்துச் சென்றது இந்த மண்ணின் நெறி!


குஜராத்தின் குடிமகன்


  படிப்பில் நடுத்தர மாணவன், வீட்டிற்கு அடங்கும் சுட்டிப்பையன், சைவக்குடும்பத்தில் பிறந்தும் அசைவம் உண்ணும் முயற்சி, கொடுமையான விரதம் மேற்கொள்ளுதல், 18 வயதில் தந்தை, இங்கிலாந்துக்குப் பயணம், உணவில் உஷாரான கிராக்கி, சமயத்தில் அதீத ஈடுபாடு, கஷ்டப்பட விரும்புதல், பாரிஸ்டராக தேர்வு, இந்தியா திரும்புதல், வக்கீலாக லாயக்கில்லை, கூச்ச சுபாவம், மனைவியை அடிமையாக பாவித்தல், தென்னாப்பிரிக்கா பயணம், தாழ்த்தப்படுதல், அடங்கிப் போதல், பிரிட்டிஷ் விசுவாசம், அடங்கி - அடங்கி விம்மிப் பொறுமுதல், ஒன்றிணைதல், கற்பித்தல் - ஒன்றிசேர்த்தல், புரட்சி செய்தல், இந்தியாவிற்கு வருகை, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காமை, ஆர்வமின்மை, காங்கிரஸ் தொடர்பு, கோகலேயின் உதவி, பயந்த சுபாவம், ஏழையைக் கண்டு இரங்குதல், போராடுதல், வெற்றி அடைதல், பழக்கப்படுதல், சச்சரவுகள், சமாதானம், இறுதியாக ஒரு புல்லட்!


   இப்படி காற்புள்ளிகளுக்குள்ளேயே அடக்கிவிடுகிற வாழ்க்கை தான் என்று எண்ணிவிடலாம் இவரை. இத்தனையையும் அள்ளிப்போட்டுக் கொண்டு, இரத்தமும் சதையுமாக ஒரு மனிதன் வாழ்த்திருக்கிறான் என்றால், அதற்கு என்ன பெயர் சூட்டுவது? என்ன பட்டம் சாட்டுவது?


  அகிம்சையை போதித்த மனிதர், துப்பாக்கியெடுத்து போராடுவதற்கும் ஆள் சேர்த்திருக்கிறார் என்பதெல்லாம் எத்தனை முரணான வாழ்க்கை. இதைப் படிப்போர் ஏளனம் செய்வார்கள் எனத் தெரிந்தும் குறிப்பிடும் உசிதம் காந்தியைத் தவிர வேறு எந்த மகாத்மாவுக்கு வரும். தென்னாப்பிரிக்காவில் ரெயிலில் பயணம் செய்த போது, நிறவெறியினால் தூக்கியெறிந்து வெளியே தள்ளிவிடப் பட்டிருக்கிறார். அங்குதான் காந்தி, மகாத்மா ஆக அடிகோலிய தருணமும் நிகழ்ந்தது!


  தங்கம் கொஞ்சம் ஒடுங்கியிருந்தால், வேண்டாமென்று தூக்கியெறிந்து விடுவார் யாருமில்லை. அதை நெம்பிவிட்டு, பயன்படுத்தும் மனிதர்கள் தங்கம் - தங்கம்தானே என்று சொல்வது போலத்தான், காந்தி - காந்திதான். அவர்க்கு ஈடு, அவரே! 


தென்னாட்டின் தலைமகன்


பன்னூறு ஆண்டுகளாய் அடிமைப்பட்ட சோகமே அறியாமல் வாழ்ந்து வந்தது தெற்கில் ஒரு பாமரக் கூட்டம். கால் முடப்பட்டால் கோல்கொண்டு நடக்கலாம், வாழ்வே முடப்பட்டால்? எழுது'கோல்' பிடித்து வளரலாம் என்று புத்துழி காட்டினார் இந்த அறிஞர். எழுத்தறிவித்தவனை இறைவன் என்றார்கள். பாவம். இவரோ இறை எதிர்ப்பாளார்! தாறுமாறாக தன்னையே எதிர்த்தவர் என்றும் சொல்லலாம்.


சாதிய கொடுமைகளால் பிரிந்து கிடந்த தெற்கின் தமிழ் பரப்பை தமிழென்ற ஒன்றை அடையாளத்தின்கீழ் கொண்டு வந்து மொழி அரசியலை மையப்படுத்தினார். தென்னாட்டின் பெர்னார்ட் ஷா என்று அழைக்கப்படும் அவர்தான் பேறிஞர் அண்ணாதுரை. 


மனிதன் என்பவன் தான் மட்டும் தனியாக வளர்கிறான்; போராளி என்பவன் சமூகத்தை வளர்பிக்கிறான்; தலைவன் என்பவன் தலைமுறையையே வளர்பிக்கிறான். இவரின் தனிநாட்டுக் கோரிக்கையும், மாநில சுயாட்சியும் சுதந்திர காலந்தொட்டு இன்றுவரை பேசுபொருளாகவே இருக்கிறது.‌


இரவில் வெகுநேரம் கண்விழிக்கும் அண்ணா, அதிகாலை எழுந்திருத்து பழக்கமில்லாதவர். பின்னாளில் திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமாக உதயசூரியன் கிடைத்தது. "கட்சிக்குச் சின்னமா சூரியன் கிடைச்சும் அது உதயமாறதைப் பார்க்க ஒருநாளும் எயிந்திருக்க மாட்டேன்றானே" என்று புலம்புவார் அண்ணாவின் தாய்! தம்பிக்கு எழுதிய பல கடிதங்கள் இப்படி தான் முடியும், "தம்பி, சேவல் கூவுகிறது, நான் உறங்கச் செல்கிறேன்!"


சும்மாவா கிடைத்தது சுதந்திரம்? இந்தியத் தாயின் மாணம் பல நூறு விரல்களால் காக்கப்பட்டு கரைசேர்க்கப்பட்டிருக்கிறது; சில ஆயிர தாளிகளை தானம் கேட்டிருக்கிறது, பல லிட்டர் இரத்தங்களை முகர்ந்து குடித்திருக்கிறது. இருந்துமிந்த தேசம் இன்றுவரை தீராப் பசியுடன் காவு கேட்பது எதற்கு? தியாகிகளை நினைத்து நன்றாய் வாழுவோமே! 

அவ்ளோதான் இந்தியா!

 மக்களை விட கடவுள் பெருசு என்று பேசுகிற நாடுதானே இது? தாழ்த்தப்பட்ட தலீத்தைவிட பூனூல் அணிந்த பிராமணனே பெருசு என்று பீத்துகிற தேசந்தானே இது? ...